நவசந்தியில் ஓத வேண்டிய பண்கள்

திருச்சிற்றம்பலம் 
பிரம சந்தி (மத்தி)            பண்: மேகராகக்குறிஞ்சி
நீறுசேர்வதோர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை யண்ணலே.

புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி யறிவழிந்திட்  டைம்மேலுந்தி
அலமந்த போதாக வஞ்சேலென் றருள்செய்வா னமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந் திருவையாறே.

இந்திர சந்தி (கிழக்கு)      பண்: காந்தாரம்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதுக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துயர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.

சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்திங்கட் சூளா மணியும்
வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்
ஆண்ண லரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்
திண்ணன் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம்
அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை

அக்கினி சந்தி (தென் கிழக்கு)   பண்: கொல்லி
மண்ணின்நல் லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணின்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலை
கண்ணினல் லஃதுறுங் கழுமல வளநகர்ப்
பெண்ணினல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.

கூற்றாயின வாறு விலக்ககிலீர் கொடுமைபல் செய்தன நானஅறியேன்
ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேனடி யேன்அதி கைக்கெடில வீரட்டா னத்துறை அம்மானே.

யமசந்தி (தெற்கு)        பண்:கெளசிகம்
காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே

வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழக் தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையகம் முந்துயர் தீர்கவே

நிருதி சந்தி (தென் மேற்கு)         பண்: நட்டபாடை
உண்ணாமுலை யுமையாளொடும் உடனாகிய வொருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன வருவித்திரண் மழலைம்முழ வதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி
மாவின்கனி தூங்கும்பொழில் மாதோட்டநன் னகரில்
பாவம்வினை யறுப்பார்பயில் பாலாவியின் கரைமேல்
தேவனெனை ஆள்வான் திருக்கேதீச்சரத் தானே.

வருண சந்தி (மேற்கு)       பண்: சீகாமரம் 
கள்ளார்ந்த பூங்கொன்றை மததமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடம் 
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.

பிழையுளன பொறுத்திடுவர் என்றடியேன் பிழைத்தக்கால்
பழியதனைப் பாராதே படலம்என்ன்கண் மறைப்பித்தாய்
குழைவிரவு வடிகாதா கோயிலுளா யேஎன்ன
உழையுடையான் உள்ளிருந் துளோம்போகீர் என்றானே.

வாயு சந்தி (வடமேற்கு)        பண்: தக்கேசி
பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார் வானோர்கள்
மூவார்புரங்க ளெரித்தவன்று மூவர்க் கருள்செய்தார்
தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின் நிரையோடும்
ஆமாம்பிணைவந் தணையுஞ்சாரல் அண்ணா மலையாரே.

அந்த ணாளனுன் னடைககலம் புகுத அவனைக் காப்பது காரண மாக
வந்த காலன்றன் ஆருயி ரதனை வவ்வில் நாய்குன்றன் வன்மைகண் டடியேன்
எந்தை நீயெனை நமந்தமர் நலியில் இவன்மற் றென்னடி யானென விலக்கும்
சிந்தையால் வந்துன் திருவடி யடைந்தேன் செழும்பொ ழில்திருப் புன்கூரு ளானே.

குபேர சந்தி (வடக்கு)           பண்: தக்கராகம்
பொடியுடைமார்பினர் போர்விடையேறிப் பூதகணம் புடைசூழக்
கொடியுடையூர்திரிந் தையங் கொண்டு பலபலகூறி 
வடிவுடைவானொடுங் கண்ணூமைபாக மாயவன்வாழ்கொளி புத்தூர்க்
கடிகமழ் மாமலரிட்டுக் கறைமிடற்றானடி காண்போம்.

அந்தமுமாதியு மாகியவண்ணல் ஆரழலங்கை யமர்ந்திலங்க
மந்தமுழவ மியம்ப மலைகள் காணநின்றாடிச்
சந்தமிலங்கு நகுதலைகங்கை தண்மதியம் மயலேத்ததும்ப 
வெந்தவெண் ணிறுமெய்பூசும் வேட்கள நன்னகராரே.

ஈசான சந்தி (வடகிழக்கு)            பண்: சாலாபாணி
தலையே நீவணங்காய் - தலை
மாலை தலைக் கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீவணங்காய்

எந்தமது சிந்தைபிரி யாதபெரு மானென விறைஞ்சியிமையோர்
வந்துதுதி செய்யவளர் தூபமொடு தீபமலி வாய்மையதனால்
அந்தியர் சந்திபல் வர்ச்சனைகள் செய்யவமர் கின்றவழகன்
சந்தமலி குந்தளநன் மாதினொடு மேவுபதி சண்பைநகரே.
திருச்சிற்றம்பலம்