சகலகலா வல்லி மாலை (சரசுவதி தோத்திரம்)
-குமரகுருபர சுவாமிகள்-
வெண்டா மரைக்கன்றி நின்பதந்
தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ
லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித்
தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே. 1
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள்
வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே
சகல கலாவல்லியே. 2
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு
தார்ந்துன் னருட்கடலிற்
குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ
லோவுளங் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு
களிக்குங் கலாப மயிலே
சகல கலாவல்லியே. 3
தூக்கும் பனுவற் துறைதோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந்
தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே
சகல கலாவல்லியே. 4
பஞ்சப் பிதந்தரு செய்யபொற்
பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென்
னேநெடுந் தாட்கமலத்
தஞ்சத் துவச முயர்த்தோன்செந்
நாவு மகமும்வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகல கலாவல்லியே 5
பண்ணும் பரதமுங் கல்வியுந்
தீஞ்சொற் பனுவலும்யான்
எண்ணும் பொழுதெளி தெய்தநல்
காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலுங்
கனலும்வெங் காலுமன்பாடி
கண்ணுங் கருத்து நிறைந்தாய்
சகல கலாவல்லியே. 6
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல்
காயுளங் கொண்டுதொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா
லமுதந் தெளிக்கும்வண்ணம்
காட்டும்வெள் ளோதிமப் பேடே
சகல கலாவல்லியே. 7
சொல்விற் பனமு மவதான
முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள்
வாய்நளி னாசனஞ்சேர்
செல்விக் கரிதென் றொருகால
முஞ்சிதை யாமைநல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே
சகல கலாவல்லியே. 8
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ்
ஞானத்தின் றோற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார்நிலந் தோய்புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோ
டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே
சகல கலாவல்லியே. 9
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னருமென்
பண்கண் டளவிற் பணியச்செய்
வாய்படைப் போன்முதலாம்
விண்கண்ட தெய்வம்பல் கோடி
யுண்டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ
சகல கலாவல்லியே. 10