ஆலய வெளியீடுகள்

அடியார்களே!
திருச்சிற்றம்பலம்
தேவஸ்தானத்தால் வெளியீடு செய்யப்பட்ட வெளியீடுகள் இங்கு பதிவு செய்யப்படும்

நித்திய பூஜைகள், அபிஷேகங்கள், உற்சவங்கள், மகோற்சவங்கள் அனைத்துக்குமான நடைமுறை விதிகளின் தொகுப்புலிருந்து குறிப்பிடப்பட்டுள்ள திருமுறை

ஆக்கியோன்:
ரவிச் செல்வம் தீட்ஷீதர் (கட்டளை தீட்ஷீதர்)
சிதம்பரம் (தட்சண கைலாயம் – இந்தியா)

“தீர்த்தத் திருவிழாவுக்கான யாகபூசை, தம்பபூசை, திருப்பொற்சுண்ணம், வசந்தமண்டபபூசை முடிவுற்று சந்திரசேகர் அம்பாள்வெளிவீதி வந்து சிவகங்கை குளத்தில் கிழக்குமுகமாக நிற்கச்செய்து அதுசமயம் அஸ்திரதேவரைக் கொண்டு தீர்த்தம் கொடுத்து சுவாமி வெளிவீதியாக வலம்வந்து ஆலயத்தின் பிரதான சிவன் கோபுர வாசலில் நிற்கவைத்துவிட வேண்டும். அதனைத்தொடர்ந்து நடேசர் சுவாமிக்கு வசந்தமண்டபத்தில் உபசாரங்கள் பூஜைகள் செய்து கோதரிசனம், கண்ணாடி தரிசனம், “பண்ணிநேர் மொழி.. “ தேவாரம் பாடுதல்”

திருநாவுக்கரசர் தேவாரம் – பதிகம் 5.10 – திருமறைக்காடு – (திருக்குறுந்தொகை )

பாடல் எண் : 1
பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.

பாடல் எண் : 2
ஈண்டு செஞ்சடை யாகத்து ளீசரோ
மூண்ட கார்முகி லின்முறிக் கண்டரோ
ஆண்டு கொண்டநீ ரேயருள் செய்திடும்
நீண்ட மாக்கத வின்வலி நீக்குமே.

பாடல் எண் : 3
அட்ட மூர்த்திய தாகிய அப்பரோ
துட்டர் வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
பட்டங் கட்டிய சென்னிப் பரமரோ
சட்ட விக்கத வந்திறப் பிம்மினே.

பாடல் எண் : 4
அரிய நான்மறை யோதிய நாவரோ
பெரிய வான்புரஞ் சுட்ட சுவண்டரோ
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ
பெரிய வான்கத வம்பிரி விக்கவே.

பாடல் எண் : 5
மலையில் நீடிருக் கும்மறைக் காடரோ
கலைகள் வந்திறைஞ் சுங்கழ லேத்தரோ
விலையில் மாமணி வண்ண வுருவரோ
தொலைவி லாக்கத வந்துணை நீக்குமே.

பாடல் எண் : 6
பூக்குந் தாழை புறணி யருகெலாம்
ஆக்குந் தண்பொழில் சூழ்மறைக் காடரோ
ஆர்க்குங் காண்பரி யீரடி கேளுமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே.

பாடல் எண் : 7
வெந்த வெண்பொடிப் பூசும் விகிர்தரோ
அந்த மில்லி யணிமறைக் காடரோ
எந்தை நீயடி யார்வந் திறைஞ்சிட
இந்த மாக்கத வம்பிணி நீக்குமே.

பாடல் எண் : 8
ஆறு சூடும் அணிமறைக் காடரோ
கூறு மாதுமைக் கீந்த குழகரோ
ஏற தேறிய எம்பெரு மானிந்த
மாறி லாக்கத வம்வலி நீக்குமே.

பாடல் எண் : 9
சுண்ண வெண்பொடிப் பூசுஞ் சுவண்டரோ
பண்ணி யேறுகந் தேறும் பரமரோ
அண்ண லாதி யணிமறைக் காடரோ
திண்ண மாக்கத வந்திறப் பிம்மினே.

பாடல் எண் : 10
விண்ணு ளார்விரும் பியெதிர் கொள்ளவே
மண்ணு ளார்வணங் கும்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே.

பாடல் எண் : 11
அரக்க னைவிர லாலடர்த் திட்டநீர்
இரக்க மொன்றிலீ ரெம்பெரு மானிரே
சுரக்கும் புன்னைகள் சூழ்மறைக் காடரோ
சரக்க விக்கத வந்திறப் பிம்மினே.